சென்னை: அம்பத்தூரை அடுத்த ஒரகடத்தில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு சொந்தமான உடற்பயிற்சி கூடத்தை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறுகையில்,"மின் தடை அதிகரிப்பது போல மின்கட்டணமும் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதுமே தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான எந்த வித திட்டமும் மத்திய, மாநில அரசுகளிடம் இல்லை. மின்சாரம் தயாரிக்க எவ்வளவோ வழிகள் உள்ளது. இன்னும் மின் தட்டுபாடு என கூறுகின்றனர்.
பொது கலந்தாய்வு குறித்த கேள்வி:ஏற்கனவே நீட் தேர்வினால் மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே ரேஷன், ஒரே கலந்தாய்வு, ஒரே கல்விக் கொள்கை என்பதையெல்லாம் ஏற்க முடியாது. சமமான வாழ்க்கை முறை இல்லாதபோது, சமமான கல்வி, ஒரே தேர்வு என ஏழை மாணவர்களுக்கு அநியாயம் செய்ய வேண்டாம். மேலும், நமக்கென கலாச்சாரம், பண்பாடு வரலாறு உள்ளது. அதை படிக்க முடியாத கல்வி எதற்கு?
இந்த தேர்தலிலும் பிரதமர்தான் வெற்றி பெறுவார் என பேசும் கேள்விக்கு: தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை, இந்தியர் என்றாலே இந்தி பேசும் மாநிலங்கள்தான் என பெருந்தலைவரே நிராகரித்தார். தமிழர்களுக்கு பிரதமராகும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். பின் தமிழர் ஓட்டை குறி வைத்து அமித்ஷா பேசி வருகிறார். கோவில்களை பூட்டிவிட்டு போவதுதான் சமூக நீதியா? உள்ளே சென்று வழிபடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறுவதற்கு ஒரு தலைவன் இல்லை.
பள்ளிகள் திறப்பு குறித்த கேள்வி: தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளது. அனைவரும் தனியார் பள்ளியை நோக்கி செல்கின்றனர். காரணம், கல்வி வியாபாரமாகி விட்டது. தமிழ்நாட்டில் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும். கேரளாவில் அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் கூடியிருக்கிறது.