தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'புலிகளால் ஆபத்து' - திமுகவுக்கு சீமான் கடும் கண்டனம் - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

சென்னை: தனது அரசியல் சுய லாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா? என்று திமுகவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

seeman

By

Published : Nov 21, 2019, 1:09 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விடுதலைப் புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது' எனப் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட (SPG) சிறப்புப் பாதுகாப்புப் படையின் உயரியப் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான விவாதத்தில் டி.ஆர்.பாலு இவ்வாறு பேசியிருக்கிறார்.

சோனியா காந்திக்கு உயரிய பாதுகாப்பு வழங்கக்கோருவது அவர்களது உரிமை, விருப்பம். ஆனால், அதற்கு விடுதலைப் புலிகள் பெயரைப் பயன்படுத்துவதும், அவர்களால் சோனியாவின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகக் குற்றம்சாட்டுவதும் அபாண்டமானது, அடிப்படையில்லாதது.

சோனியா காந்தி - டி.ஆர்.பாலு

விடுதலைப் புலிகளை அழித்து முடித்துவிட்டதாக இந்திய அரசே கூறியிருக்கிற நிலையில், அதற்கு விதிக்கப்பட்ட தடையே தேவையற்றது எனப் பல ஆண்டுகளாகக் கூறி வருகிறோம். அத்தடையின் மூலம் ஒட்டுமொத்த ஈழத்தமிழ் சொந்தங்களையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது அவர்களுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்துகிறது எனக்கூறித்தான் தடை விலக்கைக் கோருகிறோம். இந்நிலையில், டி.ஆர்.பாலு பேசியிருப்பது எதிராளியின் நச்சுப்பரப்புரைக்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது.

ஈழ இனப்படுகொலையில் நேரடியாகத் தொடர்புடைய கோத்தபய ராஜபக்சே இலங்கையின் அதிபராக பதவியேற்றிருக்கும் அரசியல் சூழலில் ஈழத்தமிழர்கள் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறார்கள். இந்தத் நேரத்தில் திமுகவின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் 'புலிகளால் ஆபத்து' என்று பேசுவது ஏற்கனவே பல்லாண்டுகள் நெருக்கடியில் இருக்கும் ஈழத்தமிழர்கள், இன்னும் பல ஆண்டுகளுக்கு நசுக்கப்படும் சூழல் உருவாகப்போகிறது.

கோத்தபய ராஜபக்ச - மஹிந்த ராஜபக்ச

கோத்தபய ராஜபக்சே வெற்றிக்குப் பிறகு ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதைப் போன்று அறிக்கை வெளியிட்ட திமுகவின் தலைமை டி.ஆர். பாலுவின் இந்தப் பேச்சை ஏற்றுக்கொள்கிறதா? ஆமோதிக்கிறதா? என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும்.

2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிற வேளையில், ஈழத்தமிழ் மக்களுக்குக் காங்கிரஸ் துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறி கூட்டணியைவிட்டு வெளியேறி நாடகமிட்ட திமுக, இன்றைக்குக் காங்கிரஸின் ஒட்டுண்ணியாக மாறி புலிகளைக் கொச்சைப்படுத்துகிற வேலையில் இறங்கியிருக்கிறது.

விடுதலைப் புலிகள்

சிங்கள இனவாத கொடுமைகளுக்கு எதிராக நின்று தமிழினத்தின் காவல் அரணாக இருந்த விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் கருத்துகளைத் தெரிவித்த திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உடனடியாக தனது கருத்துகளைத் திரும்பப் பெற்று, அதற்கு மன்னிப்புக்கோர வேண்டும். இல்லாவிடில், தேர்தல் களத்தில் தக்கப்பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க...

பஞ்சமி நிலம்; இரு கட்சிகளின் பிரச்னை மட்டும் அல்ல...

ABOUT THE AUTHOR

...view details