சென்னை:திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை, பெண் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் சீமானுக்கும், விஜயலட்சுமிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறி, இந்த வழக்கு தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என விஜயலட்சுமி எழுதிக் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் காவல்துறை அந்த வழக்கை கைவிட்டது. அதன் பிறகு தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், கடந்த 2011ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுவதாகக் கூறி ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், காவல் துறையினர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
கடந்த முறை நீதிமன்ற விசாரணையின் போது சீமான் தரப்பில், 2011ஆம் ஆண்டு அளித்த புகாரைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், காவல்துறை வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.