சென்னை:கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை, பெண் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் சீமானுக்கும், விஜயலட்சுமிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறி, இந்த வழக்கு தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என விஜயலட்சுமி எழுதிக் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் காவல்துறை அந்த வழக்கை கைவிட்டது.
பின்னர், இது தொடர்பாக கடந்த மாதம் 26 ஆம் தேதி விஜயலட்சுமி, மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பழைய வழக்கை விசாரிக்க வேண்டும் என சீமானுக்கு எதிராக புகார் கொடுத்தார். சீமான் ஆதரவாளர் செல்வம் என்பவர் தன்னை மிரட்டி வருவதாகவும், 1 கோடி ரூபாய் பணம் தந்ததாக தொடர்ந்து மிரட்டல் விடுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், சீமான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், கடந்த மார்ச் மாதம் முதல் தனக்கு 50 ஆயிரம் ரூபாய் 5 மாதத்திற்கு கொடுத்து உதவியதாவும், அதன் பிறகு தன்னை தொடர்பு கொள்ளாமல் ஆட்களை வைத்து மிரட்டி வந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்து இருந்தார்.
அதன் அடிப்படையில் வளசரவாக்கம் போலீசார் பழைய வழக்கை மீண்டும் விசாரணை செய்து வந்தனர். அது தொடர்பாக நடிகை விஜயலட்சுமியிடம் பல்வேறு கட்டங்களாக போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்தார். அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி நடிகை விஜயலட்சுமி சீமான் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக கூறி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுதி கொடுத்துவிட்டு பெங்களூர் புறப்பட்டு செல்வதாக தெரிவித்தார். அப்போது பேசிய விஜயலட்சுமி, "சீமான் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டு பெங்களூரு செல்லவுள்ளேன்.
காவல் துறையில் கொடுத்த புகாா் மீது நடவடிக்கை எடுக்காமல் என்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கினா். சீமானுடன் பேசி தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். இந்த வழக்கில் தொடா்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை" என்றாா். இந்நிலையில், விஜயலட்சும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.