சென்னை ஐஐடியில் முதுகலை முதலாமாண்டு படித்துவந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப், நவம்பர் 8ஆம் தேதி, ஐஐடி வளாகத்தின் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோரிடம் இருந்து பிரிந்து இருந்த நிலையில் மன அழுத்தத்தால் ஃபாத்திமா இருந்ததாக, சக மாணவிகள் தெரிவித்ததாகக் கூறி விடுதி காப்பாளர் லலிதா தேவி, கொடுத்த புகாரில் அடிப்படையில் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், மாணவி ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், பேராசிரியர்கள் சிலர் அளித்த மத ரீதியான துன்புறுத்தலால்தான் தற்கொலை முடிவுக்கு வந்ததாகவும், ஃபாத்திமா தன் செல்போனில் குறிப்பு எழுதி வைத்துள்ளதால், தனது மகளது தற்கொலையில் சந்தேகம் இருப்பது குறித்து விசாரிக்க தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறை இயக்குநரிடம் புகாரளித்தார். தற்போது இந்த வழக்கு விசாரணையானது மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.