தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 9, 2021, 11:49 AM IST

Updated : Apr 9, 2021, 11:57 AM IST

ETV Bharat / state

எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை. தேர்வுகள் நடத்த அனுமதி: அரசு பதிலளிக்க உத்தரவு

அரசு மருத்துவக் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ள சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மூலம் தேர்வு நடத்தக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Seeking permission for medical exams in raja muthaiya medical collage, notice served, MHC
Seeking permission for medical exams in raja muthaiya medical collage, notice served, MHC

சென்னை:நிர்வாக முறைகேடுகள் காரணமாக சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தைத் தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைப்புப் பெற்ற ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும், பல் மருத்துவக் கல்லூரியும், அரசு கல்லூரிகளாக அறிவித்தும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

அத்துடன் அரசு மருத்துவக் கல்லூரி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையே, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் நிர்ணயிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

மேலும் இக்கல்லூரி மாணவர்கள், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வுகளில் கலந்துகொள்ளும் வகையில் கல்லூரிகள் இணைப்புப் பெற நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக இணைப்புப் பெற தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகம் விண்ணப்பித்துள்ள நிலையில், அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ள ராஜா முத்தையா மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வு நடத்தும்படி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தை இரு கல்லூரிகளும் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறி, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், அரசு கல்லூரிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இரு கல்லூரிகளுக்கும் தேர்வு நடத்தும்படி, தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Last Updated : Apr 9, 2021, 11:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details