சென்னை:தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 மளிகை பொருள்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
சுமார் ரூ.1,297 கோடி செலவில் 2.15 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும் இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தரம் குறைந்த பொருள்
அதில், "21 மளிகை பொருள்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், பல ரேஷன் கடைகளில் குறைந்த அளவிலான பொருள்களே வழங்கப்பட்டுள்ளன. தரம் குறைந்த மளிகை பொருள்களை கொள்முதல் செய்து அலுவலர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
பல இடங்களில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்லி மற்றும் ஊசி போன்றவை இருந்துள்ளன. பல பாக்கெட்களில் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்துள்ளன. இது குறித்து புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
கரும்பு கொள்முதலில் முறைகேடு
கரும்பு கொள்முதலுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையில், விவசாயிகளுக்கு முழுமையாக கொடுக்காமல், 50 விழுக்காடு தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த முறைகேட்டில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநில அலுவலர்களும் ஈடுபட்டுள்ளனர். காவல் துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் வருவதால் இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
மேற்கொண்டு பொங்கல் பரிசு வழங்கவும் தடை விதிக்க வேண்டும்"எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க:உள்ளாட்சி மன்றங்களுக்கே ஆளும் அதிகாரம் வேண்டும் - தியாகி லட்சுமிகாந்தன் பாரதி