தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலைகளைச் சீரமைக்கக்கோரி நாற்று நட்டு போராட்டம்! - அடிப்படை வசதி

சென்னை: ஆவடி அருகே குண்டும், குழியுமாக இருந்த சாலைகளைச் சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாற்று நட்டு போராட்டம்
Road facility

By

Published : Dec 15, 2020, 2:18 PM IST

சென்னை, ஆவடி மாநகராட்சிக்குள்பட்ட 15ஆவது வார்டில் சுமார் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏழாயிரத்திற்கு மேற்பட்ட ஏழை, நடுத்தர மக்கள் வசித்துவருகின்றனர்.

இங்கு பல ஆண்டுகளாக அடிப்படை வசதி சரிவர இல்லை. குறிப்பாக, பல சாலைகள் குண்டும், குழியுமாக கிடக்கின்றன. இதனால், சிறு மழை பெய்தால்கூட சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்பதால் பாதசாரிகள் அவதிப்பட்டு சென்று வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளும் சாலையில் உள்ள பள்ளங்களில் விழுந்து காயமடைகின்றனர்.

இத்தோடு மட்டுமில்லாமல், அப்பகுதியில் வடிகால் வசதி முறையாக அமைக்கப்படாததல் மழைநீர் செல்ல முடியாமல் வீடுகளைச் சூழ்ந்து நிற்கிறது. இதில், கொசுக்கள் உற்பத்தியாகி குடியிருப்புகளில் புகுந்து பொதுமக்களைத் தாக்குகின்றன. இதன் காரணமாக, பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இப்பகுதியில் குப்பைகள் சரிவர அகற்றுவது இல்லை. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை ஆவடி மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இருந்தபோதிலும் அலுவலர்கள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துவருகின்றனர்.

இதனையடுத்து, அப்பகுதியில் அடிப்படை வசதிகளைச் செய்து தரக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் சேர்ந்து பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவுசெய்தனர். இதன்படி, இன்று (டிச. 15) 100-க்கும் மேற்பட்டோர் அன்னை சத்யா நகரில் திரண்டனர். போராட்டத்திற்கு ஆவடி தொகுதி துணை செயலாளர் ஷாஜி தலைமை தாங்கினார். பின்னர், அடிப்படை வசதிகளைச் செய்து தரக்கோரி பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

அதன்பிறகு, தண்ணீர் தேங்கி நின்ற சாலையில் நாற்றுகளை நட்டு நூதன முறையில் எதிர்ப்பைத் தெரிவித்தனர். போராட்டத்தில், ஆவடி தொகுதி செயலாளர் ஆவடி மு. ஆதவன், மாவட்ட நிர்வாகிகள் பூவை முகிலன், முல்லை தமிழன் தொகுதி துணை செயலாளர்கள் பாபு இளம்பரிதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details