சென்னை:இது தொடர்பாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், பாஜகவின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத, பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டித்து கோவை மாநகர், சிவானந்தா காலனியில் நாளை மறுநாள் (ஜூன் 16) அன்று மாலை 5 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும்.
கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், மக்கள் விரோத ஆட்சியை கடந்த 9 ஆண்டுகளாக நடத்திக் கொண்டு இருக்கிறது, மத்திய பாஜக அரசு. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மக்களுக்குக் கொடுத்தது அனைத்தும் கண்ணீரும், அடக்குமுறைகளும்தான்.
இத்தகைய சூழலில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது, பாஜக தலைமை. மாநிலங்களில் நடந்த பல்வேறு சட்டமன்றத் தேர்தல்களில் வரிசையாக தோற்று வருவதும், நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் காட்டி வரும் எதிர்ப்பும் சேர்ந்து எந்த செல்வாக்கும் இல்லாத அரசாங்கமாக 9வது ஆண்டில் மொத்தமாக தேய்ந்துவிட்டது, பாஜக ஆட்சி.
எனவே, நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியை விட்டு இறங்குவது மட்டுமல்ல, எதிர்பாராத படுதோல்வியை அடையப் போகிறோம் என்பதை பாஜக தலைமை உணர்ந்துவிட்டது. எனவே, தனக்கு எதிரான ஜனநாயக சக்திகளின் பலத்தைக் குறைப்பதன் மூலமாக வெற்றியை அடையலாமா என்ற இறுதி தந்திரத்துக்குள் பாஜக தலைமை இறங்கி உள்ளது.
இந்தியா முழுமைக்கும் பாஜகவுக்கு எதிரான அரசியல் ஜனநாயக சக்திகளின் அணிச்சேர்க்கைக்கான நாளாக வருகிற 23ஆம் நாள் குறிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் மதவாத, எதேச்சதிகார அரசியலை வேரறுக்கும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்கவும், கட்சிகளின் உறுதியைக் குலைக்கவும் முயற்சிகள் எடுக்கிறது.
அதனை அடையாளமாக பல்வேறு மாநிலங்களில் விசாரணை அமைப்புகளின் மூலமாக பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் புலனாய்வு விசாரணை அமைப்புகளை குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள் மீது பயன்படுத்தாமல், தன்னுடைய அரசியல் எதிரிகள் மீது பாஜக பயன்படுத்தி வருவதை ஊடகங்கள் புள்ளி விபரங்களுடன் பலமுறை அம்பலப்படுத்தி இருக்கிறது. ஆனாலும், பாஜக தலைமை திருந்தவில்லை.
வெளிப்படையாக, ஆணவமான முறையில் விசாரணை அமைப்புகளை அரசியல் உள்நோக்கத்தோடு பயன்படுத்தி வருகிறார்கள். எல்லா மாநிலங்களிலும் சுற்றிய பழிவாங்கும் படலம், தமிழ்நாட்டுக்கும் வந்துவிட்டது. தமிழ்நாடு என்பது பாஜகவை பின்னங்கால் பிடறியில் அடிபட விரட்டும் மாநிலம்.