தேர்வு நடத்த அரசு அனுமதி பெற வேண்டும்: உயர் கல்வித் துறை செயலர் - தேர்வு நடத்த அனுமதி
சென்னை: கல்வி நிறுவனங்களில் அரசின் அனுமதி பெற்ற பின்னரே தேர்வுகளை நடத்த வேண்டுமென உயர் கல்வித் துறை செயலாளர் அபூர்வா உத்தரவிட்டுள்ளார்.
உயர் கல்வித் துறை செயலர் அபூர்வா அனைத்து பல்கலைக்கழக பதிவாளர், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், கல்லூரி கல்வி இயக்குநர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், "கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பல்கலைகழகங்கள், கல்லூரிகள் அரசின் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சிக் கல்லூரிகள் தேர்வுகளை நடத்துவதற்கு கரோனா நிலையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ தேர்வினை நடத்துவதற்கு நிலையான பேரிடர் மேலாண்மை வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதற்கு உரிய அனுமதியை அரசிடமிருந்து அந்தந்த நிறுவனங்கள் பெற வேண்டும். அதன் பின்னரே தேர்வினை நடத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.