சென்னை: திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண்- 311இல், 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல் குறித்து 3 நபர் ஊதியக்குழு அறிக்கையை பெற்று ஊதிய முரண்பாட்டை நிறைவேற்ற வலியுறுத்தி 3 கட்டமாக போராட்டம் நடத்தப்படும். செப்டம்பர் 5-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம் நடத்தப்படும். அதன் பின்னர் கோரிக்கை நிறைவேறும் வரையில் சாகும்வரையில் காலவரையற்ற தொடர் உண்ணவிரதப் போராட்டம் நடத்தப்படும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு 13 ஆண்டுகள் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
அதாவது 01.06.2009க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,370 என்றும் அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 என்றும் “ஒரே பணி” “ஒரே கல்வித்தகுதி” “ஒரே பதவி” என அனைத்தும் ஒரே மாதிரி இருந்த போதிலும் ஒரே விதமான ஊதியம் வழங்காமல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு தீர்ப்புகளில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை புறம்தள்ளி இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதை களையக்கோரி கடந்த 10 ஆண்டுகளாக எங்களது இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.
அதில் குறிப்பாக 2018ஆம் ஆண்டு மே மாதம் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற்ற காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் நேரில் வந்திருந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உடனடியாக இப்பிரச்சனை களையப்பட வேண்டும் என அறிக்கை கொடுத்து எங்களுக்கு தோளோடு தோளாக நின்றார்.
கடந்த அரசு இந்த கோரிக்கையை செய்யவில்லை. அதனால் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண்-311ல் 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என கோரிக்கையை இடம்பெறச் செய்தார். புதிய அரசு பதவி ஏற்று இரண்டு ஆண்டு முடிவடைந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை விரைந்து செய்ய வேண்டும் என கடந்த 2022 டிசம்பர் மாதம் ஆறு நாட்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.