கடும் வெயிலிலும், மழையிலும் தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் சென்னை:கடந்த2009ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, 14 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 2009, ஜூன் 1ஆம் தேதிக்கு முன்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 8,370 ரூபாய் என்றும், அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 5,200 ரூபாய் என்றும் வழங்கப்பட்டு வருகிறது.
"ஒரே பணி, ஒரே கல்வித் தகுதி" என இருந்தபோதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டதை களையக்கோரி SSTA இயக்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியின்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் வந்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
மேலும் 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு, சம ஊதியம்" வழங்கப்படும் என்ற கோரிக்கையை, திமுகவின் தேர்தல் அறிக்கை வரிசை எண்.311-இல் இடம் பெறச் செய்தார். இந்நிலையில், திமுக அரசு பதவி ஏற்று இரண்டு ஆண்டு முடிவடைந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்றது.
அப்போது 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதனை அடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023, ஜனவரி 1ஆம் தேதி இந்த புத்தாண்டில் முதல் அறிவிப்பாக போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, ஊதிய முரண்பாடு குறித்து கருத்துகளைக் கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, கல்வித்துறை உயர் அதிகாரிகளால் மூன்று மாதத்தில் இப்பிரச்னை முடிவுக்கு வரும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், கடந்த செப்டம்பர் 25 அன்று பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், "சம வேலைக்கு, சம ஊதியம்" என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி, ஆசிரியர்கள் குடும்பத்தோடு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின்போது அவர்கள் தங்குவதற்கு பந்தல் அமைக்க அனுமதி இல்லாத காரணத்தினால், கடும் வெயிலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களில், 35க்கும் மேமற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததை அடுத்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, "கடந்த 14 ஆண்டுகளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராடி வருகிறோம். ஆனால், எங்களுக்கு அரசு, துப்பரவு பணியாளர்களை விட குறைவான ஊதியம் வழங்குகிறது.
ஒரே கல்வித் தகுதி, ஒரே பணி செய்யும் எங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டால் மட்டுமே இங்கிருந்து செல்வோம். மேலும், அரசு அறிவித்ததுபோல மூன்று மாதத்தில் ஊதியப் பிரச்னையை தீர்க்கவில்லை. அரசிடம் நிதி பற்றாக்குறை இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், நிதி பற்றாக்குறை இல்லை என நிதி அமைச்சர் தெரிவிக்கிறார்.
அரசுக்கு ஏற்கனவே கால அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டது. எனவே, இந்த முறை நிலுவைத்தொகை இல்லாமல் இன்றைய தேதியில் இருந்து அளித்தாலும் பெற்றுக் கொள்வோம். கடந்த முறை போராட்டத்தின்போது 300க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இந்த முறை 2 நாட்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் என்பதை அரசு அறிவிக்கும் வரையில் இங்கிருந்து செல்ல மாட்டோம். தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் 2ஆம் கட்ட பயிற்சிக்கும் அரசாணையைப் பெறாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து செல்ல மாட்டோம்" என தெரிவித்தார்.
மேலும், இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாமக்கல்லைச் சேர்ந்த ஆசிரியர் முருகன் கூறும்போது, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 14 ஆண்டுகளாக போராடி வருவதாகவும், அரசு தங்களின் கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கர்நாடகா பந்த்: பள்ளி, கல்லூரிகள் விடுமுறை; 44 விமானங்கள் ரத்து.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!