சென்னை:திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311இல், “சம வேலைக்கு, சம ஊதியம்” வழங்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் அறிவித்து, தற்போது அதை நிறைவேற்றாததைக் கண்டித்து 20,000 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
1.6.2009க்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, 14 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, 1.6.2009க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,370 என்றும், அதன்பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 என்றும், ஒரே பணி ஒரே கல்வித் தகுதி என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண் 311இல் 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு” “சம ஊதியம்” வழங்கப்படும் என கோரிக்கையை இடம் பெறச் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். புதிய அரசு பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்றது.
அப்போது 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது தமிழக முதலமைச்சர், 1.1.2023 இந்த புத்தாண்டில் முதல் அறிவிப்பாக போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு அமைத்து, ஊதிய முரண்பாடு குறித்து கருத்துகளைக் கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்போது, கல்வித்துறை சார்பில் உயர் அதிகாரிகளால் மூன்று மாதத்தில் இப்பிரச்னை முடிவுக்கு வரும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது. 2009இல் பணியில் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் பணி ஓய்வு பெற்று வருகிறார்கள். பணிநியமனம் பெற்று, 14 ஆண்டுகளாக கடைநிலை ஊழியர்கள் பெறும் ஊதியத்துடன் பொருளாதார நெருக்கடியால் பணிபுரிந்து வருகின்றனர்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 28ஆம் தேதி முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 8வது நாள் போராட்டத்தின் பொழுது ஆசிரியர்களை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை ஆசிரியர்களை விடுவித்த காவல் துறையினர், இரவு கைது செய்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு காவல்துறை வாகனத்திலேயே அழைத்துச் சென்று அலைக்கழித்து இறக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலில், மாநில தலைமைகள்-குரல் வழி செய்தி இல்லை. அவருடைய பேட்டி நேரடியாக ஊடகங்களுக்கு கொடுக்காமல் எங்கள் போராட்டம் குறித்த அறிவிப்பு வரும் வரை பள்ளி மற்றும் பயிற்சி புறக்கணிப்பு தொடரும். இதனைத் தொடர்ந்து இன்று எண்ணும் எழுத்தும் பயிற்சி மற்றும் வகுப்புகள் புறக்கணிப்பு.
மாநிலத் தலைமைகளின் குரல் வழி செய்தி மற்றும் அவருடைய நேரடியான அறிவிப்பு இன்றி வரும் 9ஆம் தேதி பள்ளிகளுக்குச் செல்லாமல் இடைநிலை ஆசிரியர்களின் "சம வேலைக்கு சம ஊதியம் கோரும்" காந்தியடிகள் வழியில் ஒத்துழையாமை இயக்கம் நடைபெறும் என தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க:இடைநிலை ஆசிரியர்கள் கைது; பேருந்தில் ஏற்றி அலைக்கழிக்க விட்டதாக போலீசார் மீது குற்றச்சாட்டு!