சென்னை:இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்திக் கடந்த செப்-28 ஆம் தேதி முதல் தொடர்ந்து 6வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், முதல் பருவத் தேர்வு முடிவு, இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியையையும், பள்ளிக்குச் செல்வதையும் 12 ஆயிரத்து 402 பேர் புறக்கணித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வரும் எண்ணும் எழுத்தும் பயிற்சி 1 முதல் 3ஆம் வகுப்பு , 4 மற்றும் 5ஆம் வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள், பள்ளியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்து வெளிநடப்பில் ஈடுபட்டனர். 'சம வேலைக்கு, சம ஊதியம்' என்ற ஒற்றைக் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களின், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா-வுடனான இரண்டு முறையும், நேற்று(அக்.03) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடனான பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து களத்தில் போராட்டத்திலிருந்த ஆசிரியர்கள் 'சம வேலைக்கு, சம ஊதியம்' வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காந்தி ஜெயந்தியான நேற்று(அக்.03) இரவு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண்- 311-ன் படி, 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்குச் சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 1.6.2009 க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்குக் கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, 14 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 1.6.2009 க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, அடிப்படை ஊதியம் ரூபாய் 8 ஆயிரத்து 370 என்றும், அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய் 5 ஆயிரத்து 200 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே பணி, ஒரே கல்வித் தகுதி என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது.