சென்னை:இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்தி செப்டம்பர் 28ஆம் தேதி முதல் இன்று 6வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், முதல் பருவத் தேர்வு முடிந்து இரண்டாம் பருவத்திற்கு 'எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு' இன்று (அக் 3) முதல் 8ஆம் தேதி வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சிக்கு செல்லாத ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என தொடக்க கல்வித்துறை இயக்குநரகம் அறிவுறித்தியுள்ளது. இந்த நிலையில், இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், போராட்ட களத்திற்கு வர முடியாத ஆசிரியர்கள், இன்று முதல் நடைபெற உள்ள எண்ணும் எழுத்தும் திட்டப் பயிற்சியை புறக்கணிக்க வேண்டும் எனவும், போராட்ட களத்திற்கு வராத ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கார்லா உஷா உடன் இரண்டு முறையும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து, களத்தில் போராட்டத்தில் இருந்த ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காந்தி பிறந்தநாளான நேற்று இரவு, மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.