5வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் சென்னை:இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி செப்டம்பர் 28ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து 5 வது நாளாக வெயில், மழை என பாராமல் கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றை கோரிக்கை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசிரியர்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் 170-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஆசிரியர்கள் பலர் மயக்கம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வதற்கு போதுமான ஆம்புலன்ஸ் வசதி இல்லாத அவல நிலை உருவாகியுள்ளது எனத் தெரிவித்தனர்.
“கடந்த 14 ஆண்டுகளாக 'சம வேலைக்கு சம ஊதியம்' கேட்டு போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் அதிமுக ஆட்சியின் போது 2018 இல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு க ஸ்டாலின் போராட்ட களத்திற்கு வந்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் போராடுபவர்களை அரசு அழைத்துப் பேச வேண்டும் என வலியுறுத்தி சென்றார்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியதை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களின் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்கள் செப்டம்பர் 25ஆம் தேதி மற்றும் அக்டோபர் 1ம் தேதி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எந்தவித சமரச முடிவும் எட்டப்படவில்லை என்பதால் அதனைத் தொடர்ந்து ஐந்தாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண்- 311ல், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு “ சம வேலைக்கு சம ஊதியம்” வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 1.6.2009 க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு 14 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
ஒரே பணி ஒரே கல்வி தகுதி:அதாவது 1.6.2009 க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8370 என்றும் அதன்பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 என்றும் “ஒரே பணி ஒரே கல்வி தகுதி” என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண்-311ல் 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்கப்படும் என கோரிக்கையை இடம் பெற செய்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின். புதிய அரசு பதவி ஏற்று இரண்டு ஆண்டு முடிவடைந்த நிலையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்றது.
அப்போது 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது தமிழக முதல்வர் 2023ன் புத்தாண்டில் முதல் அறிவிப்பாக போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களை கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் போது கல்வித் துறை உயர் அதிகாரிகளால் மூன்று மாதத்தில் இப்பிரச்சினை முடிவுக்கு வரும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது. 2009ல் பணியில் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஓய்வு பெற்று வருகிறார்கள். பணிநியமனம் பெற்று 14 ஆண்டுகளாக கடைநிலை ஊழியர்கள் பெறும் ஊதியத்துடன் பொருளாதார நெருக்கடியால் பணிபுரிந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:பள்ளிகளில் குத்து பாடல்கள் ஒலிப்பது முறையா?... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!