சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான 90 இடங்களில் இரண்டாவது நாளாக இன்று (அக்.6) வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை ஆகியவற்றில் நேற்று (அக்.5) காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும், கல்வி நிர்வாகங்களில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொள்கின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகங்கள், நட்சத்திர விடுதிகள், பிற தொழில் தொடர்பான அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அதற்கு தொடர்புடைய அலுவலகங்கள், காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம் பக்கத்தில் இயங்கி வரும் மதுபான ஆலை, சென்னை தி.நகர் மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் இயங்கி வரும் நட்சத்திர விடுதி உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதையும் படிங்க:மயிலாடுதுறை மாவட்டத்தில் வெடி தயாரிப்பு நிறுவனங்களில் பாதுகாப்பு தன்மை குறித்து மறுஆய்வு செய்ய உத்தரவு!
இந்நிலையில், இன்று எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சவிதா மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளாக எவ்வளவு மாணவர் சேர்க்கை நடைபெற்றது? அவர்களிடமிருந்து நன்கொடை கட்டணம் எவ்வளவு பெறப்பட்டது? கல்வி நிர்வாகங்களில் வரிஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் கல்லூரிக்கு தொடர்புடைய சுமார் 40 இடங்களிலும், ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 50 இடங்கள் என சுமார் 90 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் கடந்த சில ஆண்டுகளாக எவ்வளவு மாணவர்கள் சேர்க்கை சேர்க்கப்பட்டது? அவர்களிடம் எவ்வளவு நன்கொடை கட்டணம் வசூலிக்கப்பட்டது? அதற்கு உண்டான ரசீதுகள் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பாரத் பல்கலைக்கழகத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதேபோல், எஸ்.ஜே.ஜே நிறுவனத்தின் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களைக் கொண்டு ஜெகத்ரட்சகனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அவரது வீடு மற்றும் அவரது அலுவலகங்களில் ரகசிய அறை உள்ளதா என்று கோணத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:“ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் போன்று பேசுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல” - ஆளுநருக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்