சென்னை:தேசிய கல்விக்0 கொள்கையின் மற்றொரு வடிவமாக மாநில கல்விக் கொள்கை உருவாகி வருவதால் அதற்கான தயாரிப்பு குழுவில் இருந்து, மாநில கல்விக் கொள்கை வரைவுக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜவகர் நேசனின் விலகல் மற்றும் குற்றச்சாட்டுகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2020-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒன்றிய பாஜக அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றமாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக் கொள்கை அறிவிப்பானது, தமிழக மக்கள், கல்வியாளர்கள் என அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மேலும், தமிழ்நாட்டிற்கான தனிக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதற்கான பணிகளும் செயல்படுத்தப்பட்டன. மேலும், துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டு கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் கருத்துக்களும் கேட்கப்பட்டன. இந்த ஆண்டின் நடப்பு மே மாதத்தில் மாநில கல்விக் கொள்கை வரைவுக் குழு தனது பணிகளை முடித்து அரசுக்கு அறிக்கை அளிக்கக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், காலக்கெடு மேலும் 3 மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வரைவுக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் ஜவகர் நேசன் அக்குழுவிலிருந்து ராஜினாமா செய்து வெளியிட்டுள்ள அறிக்கையானது, மாநில கல்விக் கொள்கை வரைவுக் குழு மீதான நம்பிக்கையைக் கேள்விக்குட்படுத்துகிறது. இதுதொடர்பாக பேராசிரியர் ஜவகர் நேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரகசியமாகவும், ஜனநாயகமற்ற முறையிலும் செயல்படும் தலைமையைக் குழு கொண்டதாலும், சில மூத்த அதிகாரிகளின் அதிகார எல்லை மீறல்களாலும், முறையற்ற தலையீடுகளாலும் இயங்க முடியாமல் வரைவுக் குழு தடுமாறிக்கொண்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
அதிகார வர்க்கத்தின் அச்சுறுத்தலும், தலையீடுகளும் தனது செயல்பாடுகளை முடக்கிவிட்டதாகவும், மாநில கல்விக் கொள்கை குழு சனாதன சக்திகளின் நலன்களுக்குச் சாதகமாக உள்ளது என்றும், உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு எதிராகக் குழு செயல்படுவதாகவும், தேசிய கல்விக்கொள்கையின் மற்றொரு வடிவமாக மாநில கல்விக் கொள்கை உருவாகி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடிப்படை வசதிகளும், போதுமான கட்டமைப்புகளும் இல்லாத நிலையில், அதிகாரிகளின் கடின நெருக்கடி சூழ்நிலைக்கு மத்தியில், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் மேற்கொண்ட கருத்துக்களின் அடிப்படையில், 232 பக்கத்திற்கு இடைக்கால அறிக்கையை எழுதி அவர் குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில், தேசிய கல்விக் கொள்கை 2020-இன் அடியைப் பின்பற்றி மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்நிலை நீடித்தால், அது தமிழக மக்களின் விருப்புணர்வுகளுக்கும், தமிழ்ச்சமூகத்தின் உயரிய விழுமியங்களுக்கும் பெரும்பாலும் எதிராகவே கல்விக் கொள்கையின் விளைவுகள் இருக்கும் என அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.