இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையில் அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு காரணமாக, வீடுகள், வணிக நிறுவனங்களில் பிப்ரவரி-மார்ச் மாத மின் நுகர்வு கணக்கிடப்படாமல் முந்தைய மாத கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு செய்தது.
இதைத்தொடர்ந்து தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிப்ரவரி-மார்ச் மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களுக்கான மின்நுகர்வு கணக்கிடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து மக்களும் வீடுகளில் முடங்கிய காரணத்தாலும், சுட்டெரிக்கும் வெயில் காரணமாகவும் தொலைக்காட்சி, மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்கள் பயன்பாடு அதிகளவில் இருந்த காரணத்தாலும், வழக்கத்துக்கு மாறாக மின் பயன்பாடு அளவு அதிகரித்து மின் கட்டணமும் அதிகரித்துள்ளது.
அதோடு பல்வேறு இடங்களில் மின் நுகர்வு அளவீடு செய்வதில் மின்சார வாரியம் அறிவித்த முறைக்கு மாற்றமாக மொத்த நுகர்வை இரண்டாக பிரித்து கணக்கீடு செய்யாமலும், ஏற்கனவே செலுத்திய தொகைக்கான மின் யூனிட்டை கழிக்காமல் தொகையை மட்டும் கழித்தும் மின் நுகர்வு அளவீடு கணக்கீடு செய்யப்பட்டுள்ளதால், வழக்கத்துக்கு மாறாக பல மடங்கு மின் கட்டணம் வந்துள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.