சென்னை:பெண் கல்வியின் அவசியத்தையும், உலகில் பெண்கள் மீது மட்டும் அடுக்கடுக்காக திணிக்கப்படும் கலாச்சாரம் சார்ந்த அடக்குமுறைகளைக் கேள்விகளாக மக்கள் மனதில் எழுப்பும் வகையில் ZEE5 தளத்தில்(ஜனவரி 26) வெளியாகி, பெரும்பான்மையான மக்களின் பாராட்டுக்களைக் குவித்த இணையத் தொடர் தான் அயலி. திரைத்துறை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்ததால், இத்தொடரைப் பள்ளிகளில் திரையிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அழுத்தமாகக் கோரிக்கை வைத்தனர்.
எனவே இந்த கோரிக்கையை முன்னெடுத்து, பெண்கள் கல்வி பெறுவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் இந்த வெப் சீரீஸ், கொளத்தூர் எவர்வின் வித்யாஸ்ரம் (Everwin Vidhyashram, Kolathur ) பள்ளி மாணவிகளுக்காகச் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இந்த திரையிடலில் 8-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பைச் சார்ந்த 35 மாணவிகள் பங்கேற்றனர்.
மேலும், இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீமதி. ஐஏஎஸ் காகர்லா உஷா, முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு திரு.கே.நந்தகுமார் ஐஏஎஸ்., ஆணையர் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு ஆகியோர் கலந்துகொண்டு, மாணவிகளுடன் உரையாடி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இவ்விழாவினில் ZEE5 தெற்கு தலைமை கிளஸ்டர் அதிகாரி திரு. சிஜு பிரபாகரன், ZEE5 நிறுவன தலைமை அதிகாரி கௌசிக் நரசிம்மன், அயலி தொடரின் தயாரிப்பாளர் S. குஷ்மாவதி இயக்குநர் முத்துக்குமார், நடிகை அபி நட்சத்திரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.