சென்னை:கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் சற்று அதிகமாவே இருந்தது.
அதனைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு எனப் பல்வேறு கட்ட ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்தது. தற்போது கரோனா சற்று குறைந்து வருகிறது.
இதனால் பல்வேறு தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை காரணமாக கிட்டத்தட்ட 18 மாதங்களாக மூடப்பட்ட இருந்த பள்ளிகள் (9,10,11,12 ஆம் வகுப்பு) மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 முதல் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அனுமதி வழங்கினாலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது. அந்த விதிமுறைகளைப் பின்பற்றி சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் செப். 1இல் திறப்பதற்கு அனைத்து நடவடிக்கையும் மாநகராட்சி எடுத்து வருகிறது.
சென்னை மாநகராட்சியின்கீழ் 119 ஆரம்பப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 32 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
தற்போது 9,10,11,12ஆம் வகுப்புகள் மட்டும் திறப்பதால் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் 70 பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த 70 பள்ளிகளில் மொத்தம் 13,336 மாணவர்கள், 13,992 மாணவிகள் என 27,328 பேர் பயின்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஆலோசனைக் கூட்டம்
மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வர இருக்கும் நிலையில், முதலில் மாநகராட்சி கல்வி அலுவலர், மாநகராட்சிப் பள்ளி முதல்வர் தலைமையில் ஆகஸ்ட் 31இல் பெற்றோர் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநகராட்சிப் பள்ளிகளில் எடுத்த நடவடிக்கை அனைத்தும் பெற்றோருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இது மட்டுமின்றி ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திய பிறகே பள்ளிகளுக்கு வர வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 3,328 மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர்.
அதில் 2,999 ஆசிரியர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் 2,104 ஆசிரியர்கள் இரண்டு தவணைத் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 2,002 ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் 1,688 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 759 நபர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
பள்ளிகள் திறக்க தயார்
அனைத்து பாதுகாப்பு நடவடிக்கை உடன் பள்ளிகள் திறக்கத் தயார் நிலையில் உள்ளது.
"அரசு அறிவித்த விதிமுறைகளை சரியாகப் பின்பற்று வருகிறார்களா எனத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்" என மாநகராட்சி உதவி கல்வி அலுவலர் முனியன் தெரிவித்தார்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், "மாநகராட்சி கட்டுப்பாட்டில் 281 பள்ளிகள் உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் அரசு அறிவித்த விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்பதைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு -ஆலோசனை வகுப்பறை முழுவதும் சுத்தம்
முதலில் வகுப்பறை முழுவதும் கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. பிறகு பள்ளி வளாகம் அனைத்தையும் தூய்மையாக வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறன.
மாநகராட்சி ஆசிரியர்கள் கிட்டத்தட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மீதம் உள்ள ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தாத காரணங்களை ஆராய்ந்து வருகிறோம். தடுப்பூசி செலுத்தப்பட்ட ஆசிரியர் மட்டுமே மாணவர்களுக்குப் பாடம் எடுக்க அனுமதி வழங்கி உள்ளோம்.
இதுமட்டுமின்றி கழிவறை, தண்ணீர் தொட்டி என அனைத்தும் சுத்தமாக உள்ளது. அதையும் ஆய்வு செய்து வருகிறோம். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவதால் ஆசிரியர்களுக்கு சவாலாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பெற்றவர்களுக்கு பாதுகாப்பு குறித்து கவலை இருக்கக் கூடும். இதனால் இன்று பெற்றோர்களை அழைத்து அவர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் நடைபெற்றது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வருவதால் நேரடியாக மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் அவர்களுக்கு ஏற்கெனவே படித்த பாடத்தை கற்றுத் தர உத்தரவிட்டுள்ளோம்" என்றார்.
சுழற்சி முறையில் வகுப்புகள்
அரசு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதால் வகுப்புகளை சுழற்சி முறையில் நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய மாநகராட்சி பள்ளி முதல்வர் ஆறுமுகம், "மாணவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க கிட்டத்தட்ட ஒரு வாரம் பள்ளி முழுவதும் தூய்மைப்படுத்துவதற்கான பணி நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். குடிநீர் குழாய், கழிவு என அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் பயம் இல்லாமல் பள்ளிக்கு வரலாம்.
10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு வாரத்திற்கு 5 நாட்கள் வகுப்பு நடைபெறும். அதைப்போல் 9 மற்றும் 11ஆம் வகுப்புக்கு சுழற்சி முறையில் 20 மாணவர்கள் என பள்ளி நடைபெறும். பள்ளிக்கு உள்ளே வருவதற்கு முன்பு மாணவர்களுக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படும். அதுமட்டுமில்லாமல் மதிய உணவு இடைவேளையை கண்காணிக்க தனிக் குழு ஒன்றை அமைத்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் மீதான நம்பிக்கை
ஆசிரியர்கள் மீதான நம்பிக்கையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம் என மாணவ மாணவிகளில் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கலீல் ரஹ்மான், "எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் ஏற்கெனவே படித்து முடித்துவிட்டனர்.
மூன்றாவது குழந்தை பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். செப்டம்பர் 1 முதல் பள்ளி திறப்பது பெற்றோருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எங்களுக்கு எடுத்துக் கூறினர். பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. இதனால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப உள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க:அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வகுப்புகள் நடத்தப்படும் - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்