சென்னை: அக்டோபர் மாதத்தில் கரோனா தொற்றின் மூன்றாம் அலை உச்சம் பெறும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மூன்று லட்சத்து இரண்டாயிரத்து 351 ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களும் பணிபுரிந்துவருகின்றனர். சுமார் நான்கு லட்சம் பணியாளர்கள் 75 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் இரண்டு தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர்.
அதேபோல் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் தனியார் பள்ளியில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்ற விவரம் பள்ளிக் கல்வித் துறையால் பெறப்படவில்லை. செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் பொழுது தடுப்பூசி போடாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செய்துவருகின்றனர்.
பள்ளியில் அனைத்து வகை ஆசிரியர்களும் கரோனா தடுப்பூசி போட்டுள்ளார்களா என உறுதிசெய்யப்பட வேண்டும் எனவும், ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தை ஆகஸ்ட்27ஆம் தேதிக்குள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புத்தாக்கப் பயிற்சி
கரோனா வைரஸ் தொற்று காரணமாக அதிக நாள்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு வருகைபுரிகின்றனர். இவர்களை ஊக்குவிக்கும்விதமாக அரசால் வழங்கப்பட்ட புத்தாக்கப் பயிற்சியை 45 நாள்களுக்கு மாணவர்களுக்கு நடத்த வேண்டும்.