தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிக்குச் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு புகார்: விரைவில் நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவு!

சென்னை: பள்ளிக்குச் செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பான புகாரில், இரு தரப்புக்கும் வாய்ப்பளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jan 17, 2020, 6:16 PM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசலடி தெருவில் உள்ள புனித அந்தோணியார் மெட்ரிக், மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாதையில் உள்ள 30 அடி சாலை, கலைமணி என்பவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி வாகனங்களுக்கு இடைஞ்சல் இருப்பதால், அந்த ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடக் கோரி பள்ளியின் தாளாளர் வின்சென்ட் ஆரோக்கியராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பையா, ஆர். பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கலைமணி சார்பில் ஆக்கிரமித்ததாகக் குறிப்பிடும் இடம் ஆதிதிராவிடர் மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத் துறை வடுகநாதன் என்பவரிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலம் என்று வாதிட்டார்.

அரசுத் தரப்பில் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக வருவாய்த் துறை ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நில ஆக்கிரமிப்பு சட்டப்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், திருவாரூர் மாவட்ட ஆட்சியர், திருத்துறைப்பூண்டி கோட்டாட்சியர், வட்டாட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட நிலம் குறித்து இரு தரப்பிற்கும் வாய்ப்பளித்து சட்டப்படி உரிய உத்தரவை 12 வாரங்களில் பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: அரசியல் சாசன பொறுப்புகளை டிஎன்பிஎஸ்சி தட்டிக்கழிக்கக் கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details