சென்னை:தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர், பார்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர், ரேவதி (50). இவர் படப்பையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்காக தனது மகள் தீபிகா (21) உடன் இருசக்கர வாகனத்தில், பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்பகுதியில் மதனபுரம் அருகில், எரிவாயு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாததால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்துள்ளது. அந்தப் பகுதியைக் கடக்க முயற்சி செய்தபோது வேகத்தை கட்டுப்படுத்த பிரேக் பிடித்துள்ளார், இவரது மகள் தீபிகா. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார் ரேவதி. அப்போது பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி வாகனத்தின் பின் டயரில் இருவரும் சிக்கிக்கொண்டனர்.
இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், அவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டபோது, சிகிச்சை பெற்று வந்த ரேவதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ரேவதியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் வாகனத்தை ஓட்டிச்சென்ற அவரது மகள் தீபிகா தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.