சென்னை: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விவரங்கள், பள்ளிக்கல்வித் துறையால் சேகரித்து வைக்கப்படுகிறது. குறிப்பாக, இந்த தகவல்கள் EMIS என்ற பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் சேமித்து வைக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் மாணவர்களை தங்களது கல்லூரியில் சேர சொல்லி அலைமோதும் கல்லூரிகளுக்கு, இந்த விவரங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. தரவுகளை விலை கொடுத்தும் வாங்கும் பல கல்வி நிறுவனங்கள், இதன்மூலம் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கும்பலை சேர்ந்த ஒருவர் பேரம் பேசும் ஆடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
6 லட்சம் மாநில பாடத்திட்ட மாணவர்களின் விவரங்களும், 35 ஆயிரம் சிபிசிஎஸ்இ பள்ளி மாணவர்களின் தரவுகளும் விற்பனைக்கு உள்ளதாகவும், குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு ஆன்லைன் வாயிலாக பணம் அனுப்பினால் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 6 லட்சம் மாணவர்களின் விவரங்களை தர இருப்பதாகவும் அந்த ஆடியோவில் மோசடி நபர் கூறியிருந்தார்.
இதையடுத்து, பள்ளி மாணவர்கள் விவரங்களை திருடி விற்பனை செய்வது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு, கல்வித் திட்ட மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியக்கோடி புகார் அளித்துள்ளார். மாணவர்களின் தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் வகையில் நடக்கும் இந்த தகவல் திருட்டு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டது.