சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் காவல் குடியிருப்பைச் சேர்ந்தவர் அய்யனார்(34). இவர் டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அய்யனார் மற்றும் தலைமைக் காவலர் கமலக்கண்ணன் ஆகிய இருவரும் கே.வி.என் புரம் இரண்டாவது தெரு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஸ்கூட்டி வகையிலான இருசக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்ததாக இருவரிடமும் இரு காவலர்கள் சென்று விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென இருசக்கர வாகனத்தைக் காவலர் அய்யனார் மீது தள்ளிவிட்டு இரு வாலிபர்களும் தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தலைமைக் காவலர் கமலக்கண்ணனின் கை கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தெரியவருகிறது.
தலைமை காவலர் அய்யனார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து, காவலர் மீது இருசக்கர வாகனத்தைத் தள்ளிவிட்டதாக டி.பி சத்திரம் கே.வி.என் புரம் முதல் தெருவைச் சேர்ந்த அருண்குமார்(27) மற்றும் செனாய் நகரைச் சேர்ந்த மனோஜ் குமார்(18) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஆபாசமாகப் பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், பொது ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததோடு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வருகிற 22ஆம் தேதி வரை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேர இருந்த தனது மகன் மனோஜ் மீது பொய் வழக்கு போட்டு போலீசார் சிறையில் அடைத்துவிட்டதாக மகனின் தாய் கதறி உள்ளார். இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனோஜை ஆறு வயது முதல் கணவனின் துணையின்றி தனியாக தனது மகனை வளர்த்து வருவதாகவும் தற்போது கல்லூரியில் சேர இருக்கின்ற நிலையில் பொய் வழக்கு போட்டு போலீசார் சிறையில் அடைத்துள்ளதால், மறுபடியும் கல்லூரி சேரும் வாய்ப்பு தனது மகனுக்கு கிடைக்காது என கண்ணீர் மல்க கூறினார்.