ஆவடி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இந்த பள்ளியானது மாநகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. நேற்று இரவு பெய்த கனமழையில் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது.
இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளில் உள்ள கழிவுநீர் முழுவதும் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்ததால் அங்கு துர்நாற்றம் வீசியது. இதனால், மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். மேலும் காலாண்டு தேர்வு நடைபெற்றுவரும் நிலையில் துர்நாற்றத்தால் படிக்க முடியாமல் தவிப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, ஆவடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.