சென்னை:மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் இஸ்லாமிய மதரஸா பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியைப் பீகாரைச் சேர்ந்த அன்வர் மற்றும் அக்தர் என்பவர் நிர்வகித்து வருகிறார். இப்பள்ளியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 10 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பலர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பள்ளியில் படித்து வரும் குழந்தைகளைப் பள்ளியில் உள்ள நிர்வாகிகள் சிலர் அடித்துத் துன்புறுத்துவதாகச் சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் மாதவரம் போலீசாரின் உதவியோடு பள்ளிக்கு விரைந்து வந்தனர். அங்கு ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்த 12 குழந்தைகளை மீட்டு, பின்னர் மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பீகாரில் அரபிக் வகுப்புகள் நடத்துவதற்கு வசதி இல்லாத காரணத்தினால், அந்த மாநில குழந்தைகள் இந்த மதரஸா பள்ளியில் தங்கி அரபி வகுப்புகள் படித்து வருவதும், சரியாக படிக்காத குழந்தைகளை நிர்வாகிகள் சிலர் துன்புறுத்தி உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.