சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் பல இடங்களில் கடந்த மூன்று நாட்களாக மழையானது விட்டுவிட்டு பெய்து வந்தது.
இந்நிலையில், இன்று காலை முதல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, நீலகிரி, புதுக்கோட்டை மற்றும் தேனி ஆகிய 8 மாவட்டங்களுக்கு இன்று (நவ.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து, அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தென்காசி:இன்று (நவ.23) தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் காரணத்தினாலும், கன மழை எச்சரிக்கை உள்ளதாலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது. உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி முதன்மை கல்வி அலுவலரால் பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: இன்று தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் காரணத்தினாலும், கனமழை எச்சரிக்கை உள்ளதாலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். உயர் கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும் எனவும், அதற்கான தேதி முதன்மை கல்வி அலுவலரால் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.