சென்னை:பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாற்றப்பட்ட நிலையில், இதனால் ஏற்படும் குழப்பங்களுக்கு விரைவில் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் அதிகாரம் முதலில் முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து வந்தது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் இந்த விடுமுறை அளிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாற்றப்பட்டது. இதனால் தற்போது மாவட்ட ஆட்சியர்கள், முதன்மை கல்வி அலுவலர்களிடம் அறிக்கையைப் பெற்று அதன் அடிப்படையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்ட ஆட்சியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களே பள்ளி சூழ்நிலையைப் பொறுத்து முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்ததால் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை குறித்த அறிவிப்பைத் தன்னிச்சையாக எடுக்க முடியாத ஒரு சூழல் இருக்கிறது.