சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் பணிபுரிவதற்கான இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நீண்ட காலமாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. குறிப்பாக, வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு பள்ளிக்கல்வித்துறை அளித்த அனுமதியைத் தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அவர்களுக்கான போட்டித் தேர்வினை நடத்துவதற்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆனால், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகமால் இருந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் இன்று அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதில், “அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள 1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுடன், கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அனுமதி வழங்கப்படுகிறது.
தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2022 ஆகஸ்ட் 1ஆம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுள் 1,000 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொடக்கக்கல்வி இயக்குனர் கூடுதல் பணியிடங்களை நிரப்புவதற்கும் அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதி உள்ளார். தொடக்கக்கல்வி இயக்குனரின் கருத்துரு அரசால் விரிவாக பரிசீலனை செய்யப்பட்டது.