சென்னை:18 வயதிற்கு உள்பட்ட மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் பள்ளியில் இடையில் நின்றிருந்தால் அவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மேலும் 18 வயதிற்கு உள்பட்ட மாற்றுத்திறனுடைய மாணவர்களைப் பள்ளியில் சேர்ப்பதற்கு வீடு வாரியாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன் மாணவர்களை மழலையர் பள்ளி, பள்ளி ஆயத்த பள்ளி, நேரடி வகுப்பு பள்ளி, வீட்டு வழி கல்வி மூலம் பயனடைந்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் 6 முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் மாற்றுத்திறன் குழந்தைகளைக் கண்டறியும் வகையில் வருடத்திற்கு மூன்று முறை ஏப்ரல் மே செப்டம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
அதனடிப்படையில் 2022 - 23 ஆம் கல்வி ஆண்டில் மாற்றுத் திறன் குழந்தைகளைக் குடியிருப்பு வாரியாக கண்டறிந்து அவர்களை பள்ளி ஆயத்த பயிற்சி மையங்களில் மூன்று மாதங்களுக்கு பயிற்சி அளித்து அவர்களின் இயலாமை நிலையை பொருத்து அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்த்து இடைநிற்றலைத் தடுத்திட வேண்டும்.