தமிழ்நாடு

tamil nadu

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு விழிப்புணர்வு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

By

Published : May 30, 2023, 7:55 AM IST

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

school education department
பள்ளிக்கல்வித்துறை

சென்னை: பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், "அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம், மாணவர்கள் நலன், மகிழ்ச்சியான கற்றல் சூழல், ஆசிரியர் மாணவர் நல்லுறவு போன்றவை மேம்பட என தமிழ்நாடு அரசு பல திட்டங்களை அறிவித்து திறம்பட நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாணவர்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் உடல் நலன் மற்றும் மனநலத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு 2022 - 2023ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதில் ஒவ்வொரு கல்வி ஆண்டின் முதல் வாரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மனநலம், குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்தல், தன்னம்பிக்கையை வளர்த்தல், போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை தடுத்தல், தன் சுத்தம் பேணுதல் போன்றவைகள் குறித்து பள்ளி அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று கூறினார்.

பள்ளிகளில் விழிப்புணர்வு வாரம்:

உடல் மற்றும் மனநலம் பேணும் பள்ளி சூழலில் கல்வி பெறும் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி வாய்ப்பை பெறுகின்றனர். அரசுப் பள்ளிகளில் கண்ணொளி காப்போம் திட்டம், RBSK திட்டம், WIFS திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற திட்டங்களால் கடந்த காலங்களில் மாணவர்களின் கற்றல் முறையில் குறிப்பிடத்தக்க மாறுதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாணவர்களின் உடல் மன நலனை காக்க மருத்துவ குழுக்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உரிய பரிசோதனைகளை செய்யவும் இளைஞர் நீதி சட்டம், போக்சோ சட்டம், சாலை பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்படுத்தவும் உயர் கல்வி உதவி திட்டம் உள்ளிட்ட பல அரசுத் திட்டங்கள் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்து அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஜூன் 26ஆம் தேதி விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலத்துறை, காவல் துறையுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், மாணவர்களுக்கான அவசர உதவி எண் சைல்ட் ஹெல்ப்லைன் 1098 பள்ளிக்கல்வித்துறையின் மாணவர் உதவியின் 14417 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், காவல் துறை மூலம் போதைப் பொருள் விழிப்புணர்வு மற்றும் போதை பொருளுக்கு அடிமையாவதை தடுத்தல், பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துதல், இணைய வழி விளையாட்டுகள் குறித்த விழிப்புணர்வு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: +2 மாணவர்கள் நாளை முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

ABOUT THE AUTHOR

...view details