தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு பராமரிப்பை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!

Breakfast and lunch scheme: பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி, மதிய உணவு ஆகியவை சுத்தமாகவும், தூய்மையாகவும், தரமாகவும் தயாரித்து வழங்குவதை ஆசிரியர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Breakfast and lunch scheme
காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவை கண்காணிக்க உத்தரவு - பள்ளிக்கல்வித்துறை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 8:02 AM IST

சென்னை:பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி, மதிய உணவு தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில், "பள்ளி வளாகத்திற்கு அருகில் உள்ள கடைகளில் சுகாதாரமற்ற திண்பண்டங்களை வாங்கி உண்ணக் கூடாது உள்ளிட்ட சுகாதாரம் சார்ந்த நன்னெறிகளை, அவ்வப்போது இறைவணக்கக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். மேலும், புகையிலை மற்றும் போதைப் பொருட்களினால் ஏற்படும் சீரழிவுகள் குறித்தும் அறிவுரைகள் வழங்க வேண்டும்.

மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு தொடர்பாக வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி, தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி, மதிய உணவு முற்றிலும் தூய்மையாக சமைக்கப்பட வேண்டும். சுகாதாரமான பொருட்கள் மட்டுமே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை சமைக்கும் முன்னதாக தூய்மையான நீரில் கழுவி சுத்தம் செய்யப்பட வேண்டும். சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

உணவு தயார் செய்யும் சமையல் கூடம் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். எரிபாெருட்கள், தேவையற்ற பொருட்கள் குப்பையாக வைத்திருக்கக் கூடாது. சமையலர், சமையல் உதவியாளர் தூய்மையான முறையில் சமையல் செய்வதை உறுதிபடுத்த வேண்டும்.

மாணவர்கள் உணவு அருந்தும் இடம் சுத்தமாக பராமரிக்கப்படுவதுடன், உணவு அருந்தும்போது பறவைகள், பிற விலங்கினங்கள் உணவுப் பொருட்கள், உணவு அருந்தும் இடத்திற்கு அருகில் அணுகாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

சத்துணவுத் திட்டத்தின் கீழ் முட்டை வழங்கப்படும்போது, முட்டை கெடாமல் நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் வரிசையில் உணவைப் பெற்று அருந்துவதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

கொதி நிலையில் உள்ள சாம்பார், உணவு வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அருகில் எக்காரணம் கொண்டும் மாணவர்கள் செல்லாமல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்காெள்ள வேண்டும். ஆசிரியர்கள் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும். மாணவர்களிடம் உணவு அருந்தும் முன்பாக கைகள், உணவு அருந்தும் தட்டு, டம்ளர் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்த அறிவுரைகள் கூற வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “அரசியல் காரணங்களுக்காகவே திரித்து பதிவிட்டுள்ளார்” - அமித் மாள்வியா விவகாரத்தில் தமிழக அரசு பதில்!

ABOUT THE AUTHOR

...view details