தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நல்லாசிரியர் விருதிற்கு அரசியல் தொடர்புள்ளவர்களை தேர்வு செய்யக்கூடாது - பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு! - நல்லாசிரியர் விருது 2020

School education dept.
பள்ளிக் கல்வித்துறை

By

Published : Aug 3, 2020, 4:02 PM IST

Updated : Aug 4, 2020, 5:32 PM IST

15:56 August 03

சென்னை: தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு, அரசியல் தொடர்புள்ளவர்களை தேர்வு செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டும் நல்லாசிரியர் விருது வழங்கப்படாது என்பதும் உறுதியாகி உள்ளது.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை தற்போது நிலுவையில் உள்ளதால், ஆசிரியர்களை நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த செப்டம்பர் 5ஆம் நாள் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

2020ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களை தேர்வு செய்து மாநில நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இதற்கு மாவட்ட அளவில் குழு அமைத்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு செய்து ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

நல்லாசிரியர் விருது வழங்கிட பள்ளிக்கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் நடத்தப்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கிட ஏதுவாக கருத்துருக்கள் பெறப்பட வேண்டும். வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் தந்து பரிந்துரை செய்திட வேண்டும்.

பரிந்துரை செய்யப்படும் ஆசிரியர், தமது பணியில் கடமை தவறாமலும் காலம் தவறாமல் கால நேரம் பார்க்காமல் பணிபுரிவதாகவும், தவறாது பள்ளிக்கு வருகை தந்து தன்னலமற்ற வகையில் எந்தவித பயனும் கருதாமல் மாணவர்கள் கல்வி முன்னேற்றத்துக்கு பாடுபட்டிருக்க வேண்டும். பள்ளியில் மாணவர் சேர்க்கையும், தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க செய்துள்ள ஆசிரியர்களை கண்டறிந்து விருது பெறுவதற்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

நடத்தை விதிகளுக்கு முரணாக தனிப் பயிற்சி வகுப்புகள் எடுத்து, கல்வியை வணிகரீதியாக கருதி செயல்படும் ஆசிரியர்களையும், தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் இருக்கும் ஆசிரியர்களையும் தேர்வு செய்து இந்த விருதுக்கு பரிந்துரை செய்யக்கூடாது.

பரிந்துரைக்கப்படும் ஆசிரியர் எந்தவித ஒழுங்கு நடவடிக்கைக்கும், குற்றச்சாட்டுக்கும் உட்படாதவராகவும், அரசியலில் ஈடுபட்டு, அதன் மூலம் அரசியல் கட்சிகளுடன் தொடர்பு இல்லாதவராகவும், பொதுவாழ்வில் தூய்மையானவராகவும், பொதுசேவையில் ஆர்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

குற்ற பின்னணியில் உள்ளவர்களை தேர்வு செய்து விருது பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது என புகார் மனுவின் மூலம் பின்னர் தெரியவந்தால், அதற்கான முழு பொறுப்பும் மாவட்ட தேர்வுக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஏற்க நேரிடும். மேலும், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநில நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கவில்லை என்றோ, விருது பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்றோ கூறாமல் விருது பெற தகுதியான ஆசிரியர்களை ஆய்வு அலுவலர்கள் கண்டறிந்து, விருது பெறுவதற்கு பரிந்துரை செய்ய வேண்டும். மாவட்ட தேர்வு குழுவில் தங்கள் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு ஏற்ப 1:2 என்ற விகிதத்தில் தேர்வு செய்து, ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனியாக சாதாரணப் புத்தக வடிவில் தயார் செய்து அனுப்ப வேண்டும்.

சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் சார்ந்த வருவாய் மாவட்டத்துக்கு ஒரு ஆசிரியர் தேர்வு செய்யப்பட உள்ளதால் 1:4 என்ற விகிதத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியலை மாவட்ட தேர்வுக்குழு தலைவர் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட தேசியவிருது பெற்ற எந்த ஆசிரியரையும் பரிந்துரை செய்யக்கூடாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சருக்கு நன்றி’- ஸ்டாலின் ட்வீட்

Last Updated : Aug 4, 2020, 5:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details