சென்னை:சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பில் செப்டம்பர் 5-ஆம் தேதி வழங்கப்பட உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறதா என்பதை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.
முன்னாள் குடியரசு தலைவர் சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு சார்பிலும், அந்தந்த மாநில அரசுகள் சார்பாகவும் நாளை விருதுகள் வழங்கப்பட உள்ளன.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுத் தோறும் தகுதியான ஆசிரியர்களை மாவட்ட அளவில் தேர்வு செய்து மாநில அளவில் விருதிற்கான ஆசிரியர்கள் தேர்வுச் செய்யப்படுகின்றனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் 380 ஆசிரியர்கள் தமிழக அரசு வழங்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நாளை மாலை 4 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டவர்கள் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்க உள்ளனர்.