சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அனைத்து குழந்தைகளும் தரமான கல்வி பெறுவதை உறுதிசெய்யும் நோக்குடன் உள்ளடக்கிய கல்வியையும் பள்ளிக்கல்வித்துறை வழங்கி வருகிறது.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தனி நபர் கல்வித்திட்டம் (IEP) மூலம் அவரவர் நிலைக்கேற்ற இலக்கை வடிவமைத்து அவர்களுக்கு சிறப்பு கல்வி அளித்தும், அவர்களின் முன்னேற்றத்தினையும் பங்கேற்பினையும் உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தக் கல்வி ஆண்டில் சுமார் 1.3 லட்சம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கல்வி, அனைத்து குழந்தைகளுக்குமான உரிமை. ஆகவே, எந்த குழந்தைக்கும் கல்வி விடுபடக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்த்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.