சென்னை:பள்ளிக்கல்வித்துறை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் பேசுகையில், “தொடக்கக் கல்வித்துறையில், 2021-22ம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்திருக்கின்றனர். அதில் உதவி பெறும் பள்ளிகளில் 1,00,000 பேர் சேர்ந்திருக்கின்றனர். இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க வேண்டும்.
கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1,125 மாணவர்கள் சேர்ந்து இருக்கின்றனர். அரசு உதவிபெறும் பள்ளிகளில் இந்த வருடம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள நரிக்கட்டி பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டும் 450 மாணவர்களை சேர்த்துள்ளார். பெற்றோர்களை அணுகி மாணவர்களின் எண்ணிகையை உயர்த்தியுள்ளார்.
அதுபோன்று மற்ற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் பெற்றோர்களை அணுகி மாணவர்களை ஊக்குவித்து சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தமுடியாத சூழ்நிலையில் அவர்கள் அரசு பள்ளியில் சேர வருகின்றனர். அவ்வாறு வரும் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
2020-2021ம் கல்வி ஆண்டில் பழங்குடி, பட்டியலின மாணவர்களை அதிகம் சேர்த்த தலைமையாசிரியர்களுக்கான ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.