சென்னை செனாய் நகரில் உள்ள திரு.வி.க மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் நேரில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி மாநிலம் முழுவதும் நாளை முதல் பத்து மற்றும் 12அம் வகுப்புகள் செயல்பட உள்ளன. இதன் காரணமாக பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாநிலம் முழுவதுமுள்ள கல்வித்துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. பள்ளிகளிலும் மாணவர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்வதற்காக தெர்மல் ஸ்கேனர், பல்ஸ் ஆக்சி மீட்டர் போன்ற கருவிகளும் தயார் நிலையில் உள்ளன. பள்ளியில் அனைத்து வகுப்பறைகளிலும் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் வழங்க உத்தரவு!
பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு இரண்டு மூன்று நாள்களுக்குள் பொதுத்தேர்வு குறித்த அச்சத்தை நீக்குவதற்கும், மாணவர்களை உளவியல் ரீதியாக தயார் செய்வதற்கும் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.