தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரந்தூர் இரண்டாம் விமானநிலையம் அமைய உள்ள இடத்தில் மோசடி பத்திரப்பதிவு

சென்னை பரந்தூரில் அமையவுள்ள இரண்டாம் விமான நிலையத்தின் நிலத்தில் மோசடி பத்திரப்பதிவு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

பரந்தூர் இரண்டாம் விமான நிலையம்  அமைய உள்ள இடத்தில் மோசடி பத்திரப்பதிவு
பரந்தூர் இரண்டாம் விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் மோசடி பத்திரப்பதிவு

By

Published : Aug 19, 2022, 6:36 PM IST

சென்னை:பரந்தூர் இரண்டாம் விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் உள்ள நிலங்களை மோசடி வழியாக பத்திரப்பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு 165 கோடி இழப்பு ஏற்படுத்திய பத்திரப்பதிவு கூடுதல் ஐஜி ஸ்ரீசீனிவாசன் மீது முதல் தகவல் அறிக்கைப்பதிவு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், முறைகேடாக செய்யப்பட்ட பத்திரங்களை ரத்துசெய்ய வேண்டும் என அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

பரந்தூர் விமான நிலையத்திட்டத்தில் அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு ஏற்படுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், ”பரந்தூர் இரண்டாம் விமானநிலையத்தில் 20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில், அங்குள்ள 73 ஏக்கர் நிலத்தின் மதிப்பீட்டை அதிகரிப்பதற்காக மோசடி செய்து பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

பிரகாஷ் சில்க்ஸ் அண்டு சாரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச்சேர்ந்தவர்கள் பரந்தூர், நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த 73 ஏக்கர் நிலத்தில் ஒரு சில சிறிய பகுதிகளை சதுர அடியில் பதிவு செய்ய 2020 மார்ச் 12ஆம் தேதி காஞ்சிபுரம் இணை இரண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்களைத் தருகிறார்கள்.

அதனை 2020 மார்ச் 26ஆம் தேதி சார்பதிவாளராக இருந்த பிரகாஷ் மாவட்டப்பதிவாளருக்கு இதைப்பதிவு செய்ய முடியமா? என்று விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புகிறார். மேலும், குறிப்பிட்ட 631 சர்வே எண் முழுவதும் நிலமாகவே உள்ளது எனவும், பசுமை விமான நிலையம் அமைய உள்ள நிலையில், அதிக விஸ்தீரணத்தில் அதிக சர்வே எண்களை சதுரடியாக மாற்ற ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது எனவும், நிலம் கையகப்படுத்தும்போது இழப்பீட்டுத்தொகையை அதிகமாகப்பெறுவதற்காக சதுரடியாக மாற்றிப்பதிவு செய்ய தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பரந்தூர் இரண்டாம் விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் மோசடி பத்திரப்பதிவு

அதன் அடிப்படையில் மாவட்டப்பதிவாளர் எந்த சர்வே எண்ணில் அமைந்துள்ளது என்பதைப் பிரத்யேகமாக ஆவணத்தில் குறிப்பிடாத நிலையில், இந்த ஆவணத்தை பதிவு செய்ய வேண்டாம் எனக் கூறி திருப்பி அனுப்புமாறு கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து கூடுதல் பத்திரப்பதிவுத்துறைத் தலைவர் ஸ்ரீசீனிவாசன், பிரகாஷ் சில்க்ஸ் அண்ட் சாரீஸ் நிறுவனத்தின் நிலத்தை சதுர அடியில் பதிவு செய்ய வேண்டும் எனக் கடிதம் அனுப்புகிறார்.

இதனைப் பத்திரப்பதிவு செய்ய மறுத்த பிரகாஷை இடம் மாற்றம் செய்துவிட்டு, காஞ்சிபுரத்தில் 2ஆவது இணை சார்பதிவாளராக ராஜதுரை நியமனம் செய்யப்படுகிறார். அவர் ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.8,71,000 என இருந்ததை சதுரடி மதிப்பீட்டில் ஏக்கர் 64 லட்சத்து 45 ஆயிரத்து 455 என நிர்ணயம் செய்து பதிவு செய்கிறார். தற்பொழுதைய சூழ்நிலையில் கிராமப்புறங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்தப்படும்போது 4 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதன்படி 25 கோடியில் வழங்க வேண்டிய இழப்பீடு ரூ.191 கோடி என உயர்ந்து, ரூ.165 கோடி கூடுதலாக அரசிற்கு இழப்பு ஏற்படும்.

எனவே அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசடி ஊழலில் ஈடுப்பட்ட கூடுதல் ஐஜி ஸ்ரீசீனிவாசன், சார்பதிவாளர் ராஜதுரை மீதும், பிரகாஷ் சில்க்ஸ் அண்டு சாரீஸ் நிறுவனத்தாரர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த மாதத்துடன் ஓய்வுபெற உள்ள ஸ்ரீனிவாசன் மற்றும் மோசடியில் ஈடுபட்ட பொது ஊழியர்களையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

மேலும், புதிய பத்திரப்பதிவு சட்டத்திருத்தப்படி அந்தப் பத்திரங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆட்சியிலும் தொடர்ந்து ஊழல் நடந்துகொண்டு தான் இருக்கிறது. புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்காமல், அலுவலர்களை காப்பாற்றுகின்றனர்” எனக் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: ‘ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ - அமைச்சர் சிவசங்கர்

ABOUT THE AUTHOR

...view details