சென்னை: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிஎல்ஆர்ஐ) தோல் துறையின் திறன் மேம்பாட்டுக்கான ஸ்கேல் செயலியை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார். தோல் தொழில் துறையில் பயிற்சி பெறுவோருக்கு வடிவமைத்தல் மற்றும் தயாரித்து அளிப்பதற்காக தோல் திறன் துறை கவுன்சில், இந்த செயலியை உருவாக்கியுள்ளது.
இந்த அமைப்பின் அலுவலகத்திலிருந்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்டுடியோ மூலம் இணையதளம் வழியாக வகுப்புகள் நடத்தப்படும். தோல் தொழில் துறையில் ஆர்வம் உள்ள அனைத்து வயதினரும், இந்த ஸ்கேல் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாட்டில் தோல் தொழில்துறை பெருமளவு வேலைவாய்ப்பை உருவாக்குவதாகவும், தற்போது 44 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் துறையில் பணியாற்றி வருவதாகவும் கூறினார். கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை சரியான விகிதத்தில் கலந்து இந்தத் துறையின் வளர்ச்சிக்கு சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ முக்கிய பங்கு வகிப்பதை அவர் பாராட்டினார்.
டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் அதிகரிப்பதன் காரணமாக இந்தத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து பேசிய பிரதான், திறன் பெறுதல், மறு திறன் பெறுதல், திறனை மேம்படுத்துதல் என்பதற்கு முக்கியத்துவம் அளித்து புதுப்பித்துக் கொள்ள அழைப்பு விடுத்தார்.
இந்தத் துறையின் திறன் மேம்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய தேசிய திறன் மேம்பாட்டு கழகமும், சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ-யும் இணைந்து செயல்படவிருப்பதாக கூறிய அவர், இந்தத் துறையில் பணியாற்றுவோரின் திறன்களை விரிவுப்படுத்த தேசிய அளவில் திறன் கட்டமைப்பு திட்டத்தை சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ நடத்த வேண்டும் என்று யோசனை வழங்கினார்.
திறன் மேம்பாட்டு அமைச்சகம், சிஎல்ஆர்ஐ, தோல் தொழில் திறன் கவுன்சில், தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில் ஆகியவை ஒருங்கிணைந்து சென்னை உட்பட இந்தியா முழுவதும் பொதுவான 10 வசதி மற்றும் திறன் மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.