சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு முடிந்து, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். இதில், தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் வைப்புத்தொகை பெறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேரும் பட்டியலின, பழங்குடியின மற்றும் எஸ்.சி. அருந்ததியர் சமூக மாணவர்களிடம் வைப்புத் தொகை வசூலிக்க வேண்டாம் என ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் ஆனந்த் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், "அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேரும் SC, ST, SCA மாணவர்களிடம் வைப்புத் தொகை 30 ஆயிரம் ரூபாய் வசூலிக்க வேண்டாம். கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்தப்படும். இதற்கு பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் மூலம் கட்டணம் செலுத்தப்படும் - இதற்கு பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.