டெல்லி : கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன. ஒற்றைத் தலைமை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், ஒபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திய லிங்கம், ஜேசிடி பிரபாகர் உட்பட 4 பேர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இவர்களின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, 4 பேரும் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிமுக தீர்மானங்களுக்குத் தடை விதிக்க முடியாது எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இது ஓபிஎஸ் தரப்பினருக்கு பெரும் பின்னடைவாக திரும்பியது. இதைத் தொடர்ந்து, ஓபிஎஸ் உட்பட 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும், அதிமுக தீர்மானம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.