சென்னை: கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு காலகட்டத்தில் பழங்குடியின மற்றும் பட்டியலின மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் 52 கல்லூரிகள் சுமார் 17 கோடியே 36 லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருப்பதாக வழக்கறிஞர் அசோக் குமார் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
அதன் பேரில் லஞ்ச ஒழிப்புதுறையினர் நடத்திய விசாரணையில், 10 விதமான முறையில் கல்லூரிகளில் முறைகேடு நடந்திருப்பதாக பட்டியலிட்டது. மேனேஜ்மெண்ட் கோட்டாவில் (Management Quota) சேர்ந்த மாணவர்களுக்கான உதவித்தொகையில் 4 கோடி ரூபாயும், பெரம்பலூரில் இல்லாத கல்லூரிக்கு 58 லட்சம் ரூபாய் உதவித்தொகை பெற்றுள்ளதாகவும், ஒரே மாணவருக்கு ஒரே ஆண்டில் பல முறை கல்வி உதவித்தொகை என பெயரில் 13 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.
மோசடி
மேலும் கல்வி உதவித்தொகையை கல்லூரி பயன்பாட்டுக்காக பயன்படுத்தி 24 லட்சம் ரூபாய் முறைகேடும், ஒரே மாணவனுக்கு வெவ்வேறு அடையாள அட்டையை அடிப்படையாக வைத்து பல முறை பழங்குடியின மற்றும் பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகையில் 13 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது.