தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 11, 2020, 3:32 PM IST

ETV Bharat / state

ஒடுக்கப்பட்ட மக்கள் உரிய அதிகாரத்தை நிரந்தரமாகப் பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்

சென்னை: பட்டியலினத்தவரும், பழங்குடியினத்தவரும் அதிகாரத்தில் பங்கேற்க வேண்டும் என்பதில் திமுக உறுதியுடன் இருக்கிறதென அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் உரிய அதிகாரத்தை நிரந்தரமாகப் பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
ஒடுக்கப்பட்ட மக்கள் உரிய அதிகாரத்தை நிரந்தரமாகப் பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக நெறிகளையொட்டி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஊராட்சி மன்றத் தலைவர், தரையில் அமர்ந்திருக்கும் அந்தப் படம், பொதுவாழ்வில் இருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள தலைகுனிவு.

சமத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரான இதுபோன்ற இழிசெயலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை.

பட்டியலின மக்கள் உரிய அதிகாரம் பெற்று, சமுதாயத்தின் அங்கீகாரத்தை நிரந்தரமாகப் பெற வேண்டும். மற்ற அனைவர்க்கும் இணையாக முன்னேற்றம் அடைந்திட வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக நீண்ட நெடுங்காலமாகப் போராடியும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதெல்லாம் அந்த அதிகாரத்தை அவர்களுக்குப் பகிர்ந்தளித்து, சமூகநீதியைத் தொடர்ந்து நிலைநாட்டி வரும் இயக்கம் திமுக.

நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு இதுமாதிரியான அவமரியாதைகள் நடக்கக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தேன்.

அதனடிப்படையில், எனது துறைச் செயலாளராக இருந்த அசோக் வரதன் ஷெட்டி "பட்டியலினத்தவர் ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருக்கும் பஞ்சாயத்துக்களை அடையாளம் கண்டு அங்கு இதுமாதிரி நிகழ்வுகள் நடக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்குமாறும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் அறிவுறுத்தினார்.

அதுமட்டுமின்றி, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர்களை, கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும் நேரங்களில் திடீரென்று பார்வையிட வைத்து, இதுபோன்ற பின்னடைவான நிகழ்வேதும் நடக்காத வண்ணம் கண்காணிப்பு செய்து, திமுக ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஆகவே, பட்டியலினத்தவரும் பழங்குடியினத்தவரும் அதிகாரத்தில் பங்கேற்று மக்கள் பணி ஆற்றிட வேண்டும். மாநிலத்தின் முன்னேற்றத்தில், நாட்டின் வளர்ச்சியில் முனைப்புடனும் உரிமையுடனும் ஈடுபட வேண்டும் என்பதில் திமுக என்றைக்கும் உறுதியுடன் இருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவருக்கு தெற்குத்திட்டை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்வு, சமூகநீதி போற்றும் தமிழ் மண்ணுக்கு நேர்ந்திருக்கும் அவமானம். ஆகவே இனி எந்த ஊராட்சியிலும் இதுபோன்ற அவமரியாதை நடக்கக்கூடாது; அதிமுக அரசு அதனை அணுவளவும் அனுமதிக்கவும் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details