சென்னை: முன்னாள் அரசு ஊழியரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், கடலூர் சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தபோது அதே சிறையில் ஒன்பது கைதிகள் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் இணைந்து அவ்வப்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஒன்பது கைதிகளையும் பொது சிறைக்கு மாற்றக்கோரியும், சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் உள்துறைச் செயலாளருக்கு அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் தனது மனுவை பரிசீலிக்க உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, பாதிக்கப்பட்ட நபர்களால் அல்லாமல் மூன்றாம் நபரால் வழக்குத்தொடரப்பட்டுள்ளதாலும், இந்த விவகாரம் தொடர்பாக பொதுநல வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் சம்மந்தப்பட்ட மாவட்ட நீதிபதிகளால் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? என மனுதாரருக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, மனு குறித்து தமிழ்நாடு அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க:TN Cabinet Expansion: அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்.. துறைகள் என்ன?