சென்னை: தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் உணவகங்களில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை நிறுத்துவதற்கு விடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்ட நான்கு பேர் மீது சவுக்கு சங்கர், சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், “தமிழக அரசின் போக்குவரத்துத்துறை தமிழ்நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலை உணவகங்களில் பேருந்துகளை நிறுத்துவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் டெண்டர்கள் விடப்படுகிறது.
நெடுஞ்சாலைகளில் உணவகம் வைத்திருப்பவர்கள், போக்குவரத்துக் கழகங்களில் விண்ணப்பம் அளிப்பார்கள். உணவகத்தின் உரிமையாளர்கள் ஒரு பேருந்துக்கு இவ்வளவு கட்டணம் என போக்குவரத்துக் கழகத்திற்கு பணம் கட்டுவார்கள். யார் அதிக கட்டணம் கொடுக்க முன் வருகிறார்களோ, அந்தத் தொகைக்குத்தான் அரசு ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விட்டுக் கொண்டிருந்தது.
தற்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய எஸ்.எஸ்.சிவசங்கர் பதவியேற்ற பிறகு, நெடுஞ்சாலை உணவகங்களில் பேருந்துகளை நிறுத்துவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் பொலிட்டிக்கல் பிஏ லூயிஸ் கதிரவன் என்பவரின் பினாமியான வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் மூலம் முறைகேடு நடைபெற்று வருகிறது.