தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தவர் சவுக்கு சங்கர். கடந்த 2008-ஆம் ஆண்டு அதிகாரிகள் பேசி கொண்ட ஆடியோவை ஊடகங்களுக்கு கசியவிட்ட விவகாரத்தில் சங்கர் கைது செய்யப்பட்டார். இதனால் சங்கரை பணியிடை நீக்கம் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
இதனையடுத்து வெளியே வந்த சவுக்கு சங்கர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அரசியல் ரீதியிலான பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வந்தார். இதற்கிடையே சமீபத்தில் நீதிமன்றம் மற்றும் நீதிபதி குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து சவுக்கு சங்கர் மீது கிரிமினல் வழக்குபதிவு செய்து செப்டம்பர் 15ஆம் தேதி அவருக்கு 6 மாத கால சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்ட சங்கரிடம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ் வழங்கியது. மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் அளித்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய 6 மாத கால சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஏற்கனவே சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள 4 வழக்குகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது காட்டி உள்ளனர். குறிப்பாக கடந்த 2020ஆம் ஆண்டு ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்தை பதிவிட்டதற்காக இரண்டு வழக்குகளும், 2021ஆம் ஆண்டு பிரதமருடைய பயண விவரங்களை பொது வெளியில் வெளியிட்டதற்காக 2 வழக்குகளும், சவுக்கு சங்கர் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்குகளில் நேற்று சவுக்கு சங்கரை கைது காட்டி உள்ளனர்.
சவுக்கு சங்கர் புதிதாக 4 வழக்குகளில் கைது! - சென்னை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட 6 மாத கால சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், மேலும் 4 வழக்குகளில் சவுக்கு சங்கரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சவுக்கு சங்கர் புதிதாக 4 வழக்குகளில் கைது!
இந்த கைது தொடர்பான ஆவணங்களை சிறைத்துறை அதிகாரிகளிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கொடுத்துள்ளனர். அடுத்தகட்டமாக நாளை இந்த வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முறையாக கைது காட்டி நீதிமன்ற காவலில் அடைக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; சவுக்கு சங்கர் தண்டனை நிறுத்தி வைப்பு..
Last Updated : Nov 11, 2022, 5:33 PM IST