சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகளில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. எனவே, ஜாமின் நிபந்தனைபடி, சவுக்கு சங்கர் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை அலுவலர் முன்பு ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஜாமின் பெற்ற சவுக்கு சங்கர், இன்றும் (டிச.12) விசாரணை அலுவலர் முன்பு ஆஜராகி கையெழுத்திட்டார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சவுக்கு சங்கர், “பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான யூடியூப் சேனலை (பிளாக் ஷீப்), தற்போது உதயநிதி ஸ்டாலின் வாங்கியுள்ளார்.
மேலும் கதிர் டெலிவிஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில், சித்திரம் டிவி என்ற சேனலை தற்போதுள்ள யூடியூப் சேனலின் அலுவலகத்தில் விரைவில் தொடங்க உள்ளனர். இந்த நிலையில் யூடியூப் சேனல் அலுவலகத்தில் டெக்னீஷியனாகப் பணியாற்றி வந்த விஜயவாடாவைச் சேர்ந்த பாலாஜி, கடந்த டிசம்பர் 8ஆம் தேதி இரவு அலுவலக சர்வர் அறையில் உயிரிழந்துள்ளார்.
மதுப்பழக்கத்தால் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் காவல் துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், வழக்குப்பதிவு செய்து நான்கு நாட்கள் ஆகும் நிலையில், அந்த மரணம் தொடர்பாக தற்போது வரை சம்பவ இடத்துக்குச் சென்று காவல் துறையினர் தடயங்களை சேகரிக்கவோ அல்லது மாரடைப்பு காரணமாகத்தான் பாலாஜி உயிரிழந்தாரா என்பதை உறுதி செய்யும் வகையில் விசாரணை நடத்தவோ இல்லை.