தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தலைமையில் ஆலோசனைநடைபெற்றது.
ஏப்ரல் 6.ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (மார்ச்.1) தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் பல்வேறு கருத்துக்களை கேட்டறிந்தார்.
இதில் அதிமுக, திமுக, இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ, காங்கிரஸ் சார்பில் தாமோதரன், நவாஸ் கான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீரபாண்டி, பாஜக சார்பில் பால்கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும், இன்றைய கூட்டத்தில், நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பின்பற்றக்கூடிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.